

தனது தேர்தல் தோல்வியை 10 நிமிடத்தில் மறந்து கடந்து விட்டதாகக் கூறியுள்ளார் நடிகர் பவன் கல்யாண்.
நடந்த முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசக்தி கட்சி தோல்வியை சந்தித்தது. தான் தோல்வி பெற வேண்டும் என எதிர்கட்சிகள் பல கோடி ரூபாய் செலவு செய்ததாக முன்னதாக பவன் கல்யாண கூறியிருந்தார். தற்போது அமெரிக்காவில், தெலுங்கு சமூகத்தினரின் விழா ஒன்றில் கலந்து கொண்ட பவன் கல்யாண், தனது தேர்தல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
"ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் முதல் படி தான். குஷி படத்தின் வெற்றி விழாவில் இனி ஈவ் டீசிங் செய்யக் கூடாது என்று நான் சொன்ன போது அங்கிருந்த இளைஞர்கள் யாரும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அப்போதிலிருந்தே சினிமா மனிதர்களை மாற்றாது, பாதிக்காது என்பது புரிந்தது. அன்றே சமுதாயத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அன்றிலிருந்தே சினிமாவின் மீதான ஆர்வம் குறைந்தது. சமூகத்தைப் பற்றி நிறைய படிக்க ஆரம்பித்தேன்.
தோல்விகள் எனக்கு புதிதல்ல. தேர்தலில் நான் தோற்றபோது ஒரு 10 நிமிடங்கள் மன அழுத்தத்தில் இருந்தேன். பின் அது பற்றி மறந்து விட்டேன். எனக்கு தோல்வியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியும்.
நான் நன் மதிப்புகளை முன் வைத்து அரசியல் செய்தேன். வாக்காளருக்கு பணம் தரவில்லை. மக்களின் தீர்ப்பை பெற நான் பொறுமையாக காத்திருப்பேன். சிறைக்குச் சென்றவர்களே பல காலம் காத்திருந்து பதவிக்கு வரும்போது நான் காத்திருந்து வர முடியாதா. மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று பவன் கல்யாண பேசினார்.