

நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டி இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த கேரள நடிகர் சங்க அமைப்பான அம்மா சங்க ஆலோசனை கூட்டத்தில் பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது. அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த கும்பல் அதனை வீடியோவில் பதிவு செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.50 லட்சத்துக்காக பாவனாவை கடத்தியதாக தெரிவித்தார்.
இந்தத் கடத்தல் சம்பவத்தின் திருப்புமுனையாக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நடிகை பாவனா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரனணையில் திங்கட்கிழமை நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.