

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்புக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம் அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸுக்கு அனுமதி அளித்துள்ளது.
நடிகை பாவனாவுக்கு காருக்குள் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு ‘120 பி’யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக்காவலில் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று அங்கமாலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பிலும் திலீப்பை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவரை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
திலீப் அங்கமாலி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் தகவல் தெரிந்து ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்து வரப்பட்டார்.
முன்னதாக கைதுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திலீப், "நான் அப்பாவி. இந்த வழக்கில் என்னை சிக்கவைத்து விட்டனர். நான் நிரபராதி என நிரூபிப் பேன்" என்றார். கேரள போலீஸார் கூறும் போது, "கடந்த 2013-ல் எர்ணாகுளத்தில் உள்ள அபாது பிளாசா 410-வது அறையில் வைத்து திலீப் ஏற்கெனவே பாவனாவைக் கடத்த பல்சர் சுனிலுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார். எனவே, இது 4 ஆண்டுகளாக திட்டமிட்ட சதி" என்கின்றனர்.