பாவனா வழக்கு: சொந்த ஊர் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் திலீப்

பாவனா வழக்கு: சொந்த ஊர் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் திலீப்
Updated on
1 min read

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப், செவ்வாய்க்கிழமை அன்று அங்கமாலியில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர் அவரின் சொந்த ஊரான ஆலுவாவில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பலத்த போலீஸ் காவலுக்கு மத்தியில் திலீப், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாஜிஸ்திரேட்டின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே விசாரணைகள் முடிந்தபிறகு, மாஜிஸ்திரேட் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அப்போது மாஜிஸ்திரேட்டின் இல்லத்துக்கு வெளியேயும், ஆலுவா சிறைக்கு வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திலீப்புக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது ''வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்'' (திலீப் நடித்த பிரபலத் திரைப்படத்தின் பெயர்) என்று முழக்கமிட்டனர்.

திலீப் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராம்குமார், ஐபிசி 120பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்?

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது. அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல்ரீதியாக துன் புறுத்திய அந்த கும்பல் அதனை வீடியோவில் பதிவு செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.50 லட்சத்துக்காக பாவனாவை கடத்தியதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நடிகை பாவனா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.

கடந்த வாரம் அவரிடம் சுமார் 12 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதேபோல அவருக்கு மிகவும் நெருக்கமான இயக்குநர் நாதிர்ஷா, சகோதரர் அனுப், மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடமும் போலீஸார் தனித் தனியாக விசாரணை செய்தனர்.

ஆதாரங்களின் அடிப்படையிலேயே திலீப் கைது

இதுகுறித்துப் பேசிய கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா, ''விசாரணையின்போது காவல்துறை திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in