பாகுபலி வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு: படக்குழுவினருக்கு பிரபாஸ் நன்றி

பாகுபலி வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு: படக்குழுவினருக்கு  பிரபாஸ் நன்றி
Updated on
1 min read

'பாகுபலி' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜூலை 10, 2015-ம் ஆண்டு 'பாகுபலி' முதல் பாகம் வெளியானது. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலையும் குவித்தது. 2016-ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி, அதுவும் வசூலைக் குவித்தது.

'பாகுபலி' முதல் பாகம் வெளியாகி, 2 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு பிரபாஸ் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்றோடு ’பாகுபலி’ திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

‘பாகுபலி’ குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய, அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலி சாருக்கும், ’பாகுபலி’ குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை, நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 'சாஹோ' படப்பிடிப்பில் இருக்கும் பிரபாஸுக்கு மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. GQ இதழ் வெளியிட்டுள்ள 'அதிக செல்வாக்கு நிறைந்த இளம் இந்தியர்கள்' தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார் பிரபாஸ். இந்த இதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற பிரபலங்கள் பிவி சிந்து, டில்சித் டொசாஞ்ஜ், அலாக்ரிடா ஸ்ரீவஸ்தவா, கரண் கில், மனு சந்திரா, ராஜ் குமார் ராவ், பாட்ஷா, சஞ்சய் கார்க், ராதிகா ஆப்தே, மற்றும் நீரஜ் சோப்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in