

எனது படங்கள் பெண்கள் அவமரியாதை செய்யப்படுவதை கொண்டாடும் விதத்தில் இருக்காது என்று நடிகர் ப்ருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு முதல் ஆளாக தன்னுடைய கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினார் ப்ருத்விராஜ். மேலும், 'ஆடம்' என்று பெயரிடப்படுள்ள படத்தில் பாவனாவுக்கு நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இன்று (பிப்.25) முதல் 'ஆடம்' படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'துணிச்சல்' என்று தலைப்பிட்டு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர் கூறியிருப்பது, "எனது வாழ்வில் சில சோகமான தருணங்களில் நம்பமுடியாத அளவு தைரியம் தான் எனக்கு தோள் கொடுத்திருக்கிறது. அந்த தைரியம் கடவுளின் மிக மென்மையான அதே சமையம் நுட்பமான படைப்புகளான பெண்களிடமிருந்து வந்தது.
தடம் புரண்ட வாழ்க்கையின் சிதறிய துண்டுகளை சேகரித்து, இரண்டு இளம் சிறுவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த தாய். 40 மணி நேர பிரசவ வேதனைக்குப் பிறகு, மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையிலும், பரவாயில்லை பிருத்வி என என் கைகளை பிடித்து சொன்ன மனைவி. என் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது நான் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறேன் என்பதை மீண்டும் மீண்டும் உணர்ந்து வாயடைத்து போயிருக்கிறேன்.
இன்று, எனது அன்பு தோழி தனது அடுத்த படத்தின் ('ஆடம்') படப்பிடிப்புக்கு வந்துள்ளார். மீண்டும் என் வாழ்க்கையில் அசாதாரணமான ஒரு பெண்ணிடமிருந்து அசாதாரணமான தைரியத்தின் ஒரு கணத்தை பார்க்க முடிந்தது. இன்று அவர் ஒரு விஷயத்தை நிரூபித்துள்ளார். அது காலம் தாண்டி, இடம் தாண்டி, பாலினம் தாண்டி எதிரொலிக்கும். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துபவர். எந்த ஒரு சம்பவமும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயம் பல ஆலோசனைக் கூட்டங்களிலும், நம்பிக்கை பேச்சுகளிலும் ஒரு அங்கமாக இருக்கும். தோழியே, நீங்கள் இந்த விஷயத்தை கேட்கப்பட்டாத லட்சக்கணக்கான குரல்களின் சார்பாக சொல்லியிருக்கிறீர்கள்.
அப்படி கேட்கப்படாத குரல்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். போதிய விவேகமில்லாத வயதில், பெண்கள் மீதான வெறுப்பைக் கொண்டாடும் படங்களில் நான் பங்காற்றியிருக்கிறேன். உங்கள் சுயமரியாதையை குறை கூறும் வசனங்களைப் பேசி, அதற்குக் கிடைத்த கைத்தட்டல்களுக்கு தலை வணங்கியிருக்கிறேன். ஆனால் இனிமேல் ஒருபோதும், ஒருபோதும் எனது படங்கள் பெண்கள் அவமரியாதை செய்யப்படுவதை கொண்டாடும் விதத்தில் இருக்காது.
ஆம், நான் ஒரு நடிகன். இது எனது கலை. நான் நடிக்கும் சில கதாபாத்திரங்களின் தன்மை மோசமானதாக இருக்கலாம். ஆனால் ஒரு போதும் அந்த கதாபாத்திரத்தின் செயல்களை இனி நியாயப்படுத்த விட மாட்டேன்.
பெரியோர்களே, தாய்மார்களே, மீண்டும், அவருக்காக எழுந்து நின்று கைதட்டுங்கள். அவரது தைரியத்துக்குப் பின்னால் ஒரு மென்மையான பிரபலம் இருக்கிறார். இந்த முடிவினால், தொடர்ந்து சமூகத்தின் பார்வையில் இருக்கும் தனது வாழ்க்கையின் நிலை என்ன என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அதைக் கடந்து பார்க்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். ஏனென்றால் அது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அது, இனிவரும் காலங்களில் பலருக்கு வெளிச்சமாக இருக்கும். இன்று அவர் அதை நிரூபித்திருக்கிறார். அசாதாரணமான துணிச்சலை நிரூபித்திருக்கிறார்.
வாழ்நாள் முழுவதும் நான் உங்கள் ரசிகன் என் அன்பு தோழியே" என்று தெரிவித்துள்ளார் ப்ருத்விராஜ். ப்ருத்விராஜின் இந்த பதிவுக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, பலரும் அவருடைய முடிவு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.