

மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த வைக்கம் விஜயலட்சுமி - சந்தோஷ் திருமணம் நின்றுவிட்டதாக அறிவித்துள்ளனர்.
பல்வேறு பாடல்கள் மூலம் முன்னணி பாடகியாக வலம் வருபவர் வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவராக இருந்தவருக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொஞ்சம் பார்வை தெரிய ஆரம்பித்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வைக்கம் விஜயலட்சுமி - சந்தோஷ் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெறும் எனவும் அறிவித்தார்கள்.
இந்நிலையில் தன்னுடைய திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், "திருமணத்துக்குப் பிறகு இசை ஆசிரியராக பணிபுரிய வேண்டும், பாடகி வாழ்க்கையைத் தொடர வேண்டாம் என என்னுடைய லட்சியத்துக்கு தடையாக இருக்கிறார். முதலில் அனைத்து விதத்திலும் எனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும், திருமணத்துக்குப் பிறகு என் வீட்டிலேயே வாழ்வதாக தெரிவித்தார். தற்போது தன்னுடைய உறவினர் வீட்டில் தான் வாழவேண்டும் என்கிறார். இதனால் எனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை. ஆகையால், திருமணம் நிறுத்தப்படுகிறது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இது முழுக்க நான் எடுத்த முடிவு" என்று தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமியின் தந்தை, "சந்தோஷ் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
வைக்கம் விஜயலட்சுமியின் இந்த திடீர் அறிவிப்பு, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும், பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.