அப்பா மலையாள ரீமேக் தொடக்கம்: ஜெயராம் நாயகனாக ஒப்பந்தம்

அப்பா மலையாள ரீமேக் தொடக்கம்: ஜெயராம் நாயகனாக ஒப்பந்தம்
Updated on
1 min read

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகும் 'அப்பா' மலையாள ரீமேக்கில், ஜெயராம் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அப்பா'. சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். 2016ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

குறைந்த முதலீட்டில் சமுத்திரக்கனி உருவாக்கிய இப்படம், அவருக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. 'அப்பா' வெளியீட்டின் போதே பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமுத்திரக்கனி தெரிவித்தார்.

இந்நிலையில், 'அப்பா' முதன் முதலாக மலையாளத்தில் ரீமேக்காக உள்ளது. சமுத்திரக்கனி இயக்கவுள்ள இப்படத்தில் ஜெயராம், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

'ஆகாச மிட்டாயே' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார் சமுத்திரக்கனி. இப்படத்தின் தொடக்க விழா கேரளாவில் நடைபெற்றுள்ளது.

தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தொண்டன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in