Published : 24 Sep 2013 11:28 AM
Last Updated : 24 Sep 2013 11:28 AM

மலையாள சினிமாவின் ஆளுமை, பங்கீடு என்னை வியக்க வைக்கிறது-பாலச்சந்தர்

சென்னையில் நடைபெற்று வரும் சினிமா நூற்றாண்டு விழாவின் மூன்றாவது நாளான நேற்று (திங்கள்கிழமை) மலையாள கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், ஷீலா, சாரதா ஊர்வசி, நஸ்ரியா உள்ளிட்ட முக்கிய மலையாள நடிகர், நடிகைகள் திரளாக கலந்துகொண்டனர்.

இந்த சினிமா விழாவில் பழம்பெரும் மலையாள நடிகரும், இயக்குநருமான மதுவின் 80 வது பிறந்த நாள் கொண்டாட்டம் பெரும் சிறப்பாக அமைந்தது. இதில், நடிகர் கமல், கே.பாலசந்தர் இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய கமல், “மலையாள சினிமாவுக்கு எப்போதும் நான் கடமைப்பட்டவன். இந்த நூறாண்டு சினிமா விழாவோடு, இன்று மது சாரின் பிறந்த நாள் கொண்டாட்டமும் சேர்ந்து நடக்கிறது. மது சார் படம் இயக்கியபோது, நான் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவன். அந்த வாய்ப்பும், நாட்களும் மறக்கமுடியாது. மது சாருக்கு நேரில் வாழ்த்துகள் சொல்லும் பாக்கியம் கிடைத்ததை சந்தோஷமாக கருதுகிறேன்!” என்றார்.

மம்முட்டி பேசியபோது, “இந்திய சினிமாவுக்கு 100 வயது. மலையாள சினிமாவுக்கு 75 வயது, எங்கள் மது சாருக்கு 80 வயது. இந்த நேரத்தில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி அமைந்ததும் ஒரு சிறப்புதான்!” என்றார்.

நடிகர் மோகன்லால், “மது சார், மலையாள சினிமா உலகத்துக்கு செய்திருக்கிற பங்களிப்புக்கு, ஒட்டுமொத்த மலையாள சினிமா கலைஞர்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இன்று 80 வது பிறந்தநாள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவருக்கு வயது கணக்கு எல்லாம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர் இப்போதும் இளமையானவர்தான்!” என்றார்.

இதைத் தொடர்ந்து கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கே.பாலசந்தர் நெகிழ்ச்சி “ மூன்றாவது நாளான நேற்றைய நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாலசந்தர், “நான் ஒரு மலையாளியாக பிறந்திருந்திருக்க வேண்டும். இந்திய சினிமாவில் மலையாள சினிமாவின் ஆளுமை, பங்கீடு என்னை வியக்க வைக்கவே செய்கிறது. நான் மலையாள சினிமாக்காரனாக இருந்திருந்தால் சினிமாவில் என்னால் இன்னும் நிறைய சாதித்திருக்க முடியும் என்றே நினைக்கிறேன்!” என்றார், நெகிழ்ச்சியோடு.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் கடைசி நாளான இன்று ( செப். 24) மாலை நடைபெறவிருக்கிற விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக கவர்னர் ரோசய்யா, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கவிருக்கின்றனர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x