

நடிப்புக்கு இப்போதைக்கு டாட்டா காட்டி விட்டதாகவும், அமெரிக்காவில் மீண்டும் தன் படிப்பைத் தொடர இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார் நடிகை ரிச்சா.
தமிழில் 'மயக்கம் என்ன', 'ஒஸ்தி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரிச்சா. 'மயக்கம் என்ன' படத்தில் இவரது நடிப்பிற்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் வாய்ப்புகள் எதுவும் பெரியளவில் இல்லை என்பதால் மீண்டும் தெலுங்கு பக்கம் தாவினார்.
பல்வேறு படங்களில் நடித்தவர், தற்போது நாகார்ஜுன் ஜோடியாக 'Bhai' படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் திடீரென தனது ட்விட்டர் தளத்தில் தான் அமெரிக்காவில் மீண்டும் படிப்பை தொடரவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: “ கடந்த ஒரு வருட காலமாக நடிப்பைத் தொடரலாமா அல்லது அமெரிக்காவில் விட்ட படிப்பைத் தொடரலாமா என்று தீவிர சிந்தனையில் இருந்தேன்.
2008ல் நான் இந்தியாவிற்கு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். தற்போது நாகார்ஜுன் உடன் நடித்திருக்கும் 'BHAI' படத்தைத் தொடர்ந்தும் பல்வேறு வாய்ப்புகள் வந்தன. ஆனால், எந்த படத்தினையும் பாதியில் விட்டுவிட்டு போய் விடக்கூடாது என்பதால் எந்த புதுப்படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.
அமெரிக்காவில் எனது படிப்பை தொடரவிருக்கிறேன். நடிப்புக்கு நான் முழுக்கு போடவில்லை. படிப்பு தான் நீண்ட நாளுக்கு துணைபுரியும். ஆகையால் படிப்பை முடித்துவிட்டு வருவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் தன்னுடன் நடித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.