33 ஸ்டூடியோக்களில் பாகுபலி 2 இறுதிக் கட்ட பணிகள்: கமலக்கண்ணன் தகவல்
உலகம் முழுவதும் 33 ஸ்டூடியோக்களில் 'பாகுபலி 2' இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.
இந்தியளவில் மட்டுமன்றி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் கமலக்கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "’பாகுபலி 2’-ம் பாகத்துக்கான கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து 15 மாதங்கள் முடிந்துவிட்டன.
நமது நாட்டில் உள்ள அனைத்து முக்கிய கிராபிக்ஸ் ஸ்டூடியோக்களும் ஒரே நோக்கில், பொதுவான இலக்கை நோக்கி செயல்படுவது ஆச்சரியமளிக்கிறது. வெளியீட்டுக்காக விரைந்து கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் 33 ஸ்டூடியோக்களில் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. கற்றுகொள்ள, கற்றுத் தர ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாழ்க்கை இதை விட திருப்திகரமாக இருக்க முடியாது. நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
