

பாகுபலி-2 திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையிடப்பட உள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தெலங்கானாவைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவர் முதல் காட்சியைக் காண 350 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் ரூ.480 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள பாகுபலி திரைப்படத்தின் 2-ம் பாகம் நாளை உலகம் முழுவதும் 7,500 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வேகமாக முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில், சில போலி இணைய தளங்களும் பாகுபலி-2 படத்தின் டிக்கெட்டுகளை விற்பனை செய்து பொதுமக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கின்றன. இது குறித்து ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத் உட்பட தெலங்கானா மாநிலத்திலும், விஜயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநிலத்திலும் தியேட்டர்களில் இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியது. இதனை வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருந்து, டிக்கெட்டுகளை பெற்றுச் சென்றனர். சில தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பதாக வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன.
பாகுபலி-2 திரைப்படத்தை ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் தினமும் 6 முறையும், தெலங்கானாவில் 5 முறையும் திரையிட அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. எனவே, முதல் நாளிலேயே இந்தப்படம் ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரை வசூல் செய்து சாதனை புரியலாம் எனத் தெரிகிறது.
பெண் ஆட்சியர் பரிசு
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்ட ஆட்சியர் அம்ரபாலி காட்டா. இளம் வயது பெண் ஐ.ஏ.எஸ். ஆன இவர், மிகவும் சுறுசுறுப்பான ஆட்சியராக முதல்வர் கே.சந்திரசேகர ராவால் பாராட்டப்பெற்றவர். சமீபத்தில் வாரங்கல் நகரத்தை அழகுபடுத்த சுமார் 300 அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இரவும், பகலும் உழைத்தனர். இதனால் தற்போது வாரங்கல் நகரம் பசுமையாக காட்சியளிக்கிறது. இதற்காக இதில் பங்கேற்று உழைத்தவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அம்ரபாலி பாகுபலி-2 படத்தின் 350 டிக்கெட்டுகளை வாரங்கல் கோட்டாட்சியர் மூலம் முன்பதிவு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உட்பட அரசு ஊழியர்கள் என சுமார் 350 பேர் நாளை காலை முதல் காட்சியைக் காண உள்ளனர்.