

அறவழிப் போராட்டமே நல்வழிப் போராட்டம் என தேசத்துக்கு உணர்த்திய தமிழ் உறவுகளுக்கு நன்றி என்று மோகன்பாபு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
இப்போராட்டத்துக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்பாபுவும் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் நடைபெறும் போராட்டத்தைப் பார்த்து இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் சாமானியனின் சக்தி என்னவென்பதை புரிந்து கொள்ளட்டும்.
ஒரு போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதை உணர்த்திவரும் எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. ஜல்லிக்கட்டு என்பது கலாச்சார அடையாளம். இந்தியர்களாகிய நங்கள் எங்கள் கலாச்சார அடையாளத்தில் பெருமிதம் கொள்கிறேன்.
தவறுகள் செய்வது மனித இயல்பு. மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டுக்காக எனது தமிழ்ச் சகோதர, சகோதரிகள் நடத்தும் போராட்டத்திலிருந்து அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பாடம் கற்றுக் கொள்ளட்டும்.
அறவழிப் போராட்டமே நல்வழிப் போராட்டம் என தேசத்துக்கு உணர்த்திய தமிழ் உறவுகளுக்கு நன்றி. ஏனென்றால், இன்று அறவழிப் போராட்டம் பலருக்கும் மறந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார் மோகன்பாபு