

"துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் எப்போதுமே அவற்றை வென்று எழுந்து வந்துள்ளேன்" என்று பாவனா தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், அவரது காரை ஓட்டி வந்த மார்ட்டின், பாவனாவிடம் முன்பு ஒட்டுநராக வேலைபார்த்த பெரும்பாவூர் சுனில்குமார், வடிவால் சலீம், கண்ணூர் பிரதீப், மணிகண்டன், விஜேஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவனாவுக்கு ஆதரவாக மலையாள திரையுலகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்தன. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு ஆறுதல் கூறியதோடு, துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
சம்பவம் நடந்து ஒரு வாரமான நிலையில், நடிகர் ப்ரிதிவிராஜ் ஜோடியாக பாவனா நடிக்கும் ‘ஆதம்’ மலையாள திரைப்பட படப்பிடிப்பு, கொச்சி துறைமுகம் அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகை பாவனா பங்கேற்றார்.
மேலும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக யாரிடமும் எதுவுமே பேசாமல் இருந்து வந்தார் பாவனா. முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி, "வாழ்க்கை என்னை சில முறை கீழே தள்ளியுள்ளது, நான் பார்க்க நினைக்காத விஷயங்களைக் காட்டியுள்ளது.
துயரங்களையும், தோல்விகளையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் எப்போதும் அவற்றை வென்று எழுந்து வந்துள்ளேன். உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் பாவனா சகஜநிலைக்கு திரும்பியுள்ளதை, அவருடைய திரையுலக நண்பர்கள் வரவேற்றுள்ளனர்.