

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள இயக்குநர் கே. விஸ்வநாத், தெலுங்கு சினிமா துறையின் சாதனையாளர். அவரது படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக், டப்பிங் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டியின் சுருக்கம்
திரையுலகில் உயரிய விருதைப் பெற்றதில் எப்படி உணர்கிறீர்கள்?
திரைத்துறைக்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. அது தாமதமாக இருந்தாலும். தலைநகரத்துக்கு வந்து இந்த விருதை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் அளவு நான் சுறுசுறுப்பாக இருப்பதே எனக்கு விலைமதிக்க முடியாத ஒன்று. பல வருடங்களாக நான் செய்த முயற்சிகளுக்குப் பிறகு இப்போது திருப்திகரமாக உணர்கிறேன். என்னைப் பொருத்தவரையில், திரைப்படங்கள் என் ரத்தம் போன்றது, வெறும் தொழில் மட்டுமல்ல.
விருதைப் பெறுபவரை பேச அனுமதிப்பது இதுதான் முதல் முறை இல்லையா?
ஆம், இந்த வழக்கம் என்னிலிருந்து தொடங்கியுள்ளது. எனக்கு அது பெருமைக்குரிய தருணம். ஸ்ரீ ராகத்தில் அமைந்துள்ள தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனை ஒன்றின் வரிகளுடன் எனது உரையை துவங்கினேன். (மாபெரும் மனிதர்கள் பலர் உள்ளனர், அனைவருக்கும் என் வணக்கங்கள் என்பதே அதன் பொருள்). அது உடனடியாக கைத்தட்ல்களைப் பெற்றது. எனது வாழ்க்கையில், என் ஆசான்கள், என் பெற்றோர், என் திறமையை நம்பிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், என் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்கள் என என் வாழ்க்கையில் முக்கியமான பலருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.
உங்கள் படங்களின் இந்தி வடிவத்தையும் நீங்கள் இயக்கினீர்கள், அவை வெறும் மொழிமாற்றுப் படங்களாக இருக்கவில்லையே?
நான் இந்தியில் இயக்கிய சர்க்கம், சுர் சங்கம், ஜாக் உதா இன்சான், ஈஷவ்ர், தன்வான் ஆகியவை என் தெலுங்கு படங்களின் இந்தி மறு ஆக்கம். சிலவற்றை ராகேஷ் ரோஷன் தயாரித்தார். சங்கீத் பாத்தை குல்ஷன் குமார் தயாரித்தார். படத்தில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு எப்போது எனதாகவே இருந்தது. ஏனென்றால் ஒரு இயக்குநராக என் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என எனக்குத் தெரியும். சினிமா மூலமாக எனது கதையை சரியாகச் சொல்ல முக்கியமான சில விஷயங்களில் நான் சமாதானம் செய்துகொண்டதே இல்லை.
உங்களது பல படங்கள் நடனத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஏன் அந்த கலை வடிவத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?
ஏன் தியாகராஜர் எல்லா பாடல்க்ளையும் ராமரைப் போற்றியே இயற்றினார் என கேட்பது போல இருக்கிறது. மற்ற கலைகளை விட நாட்டியம் என்னை அதிகமாக ஈர்த்தது. வி.சாந்தாராம் இயக்கிய படங்களும் நாட்டிய தொடர்பானவையே. ஆனால் அவரது படங்கள் நமக்கு சலிக்கவில்லை. அவை நல்ல கலைப் படைப்புகள். எனது படங்கள் வெறும் நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. வலுவான கதையின் மேல் இசையும், நடனமும் சரியான வடிவம் பெற்றிருக்கும்.
நமது கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்துகொள்வது அவசியம். அதன் மரபுதான் நமது தனித்துவமான அடையாளம். பாரம்பரிய நாட்டியத்தில் பல சாத்தியங்கள் உள்ளன. சரியான தளம் பெறுவது சவலாக இருந்தது. எனக்கு சவால்கள் பிடிக்கும். திரைப்படங்கள் காட்சியை சார்ந்தது. கண்ணால் பார்க்கும் கலை அழகியலுடன் இருக்கவேண்டும். இந்த அழகியல் அம்சம் எனது அனைத்துப் படங்களிலும் இருந்தன. அது ஒவ்வொரு காட்ச்சிக்கும் நேர்த்தியை தந்தது.
அப்படியான படங்கள் இன்று ஏன் எடுக்கப்படுவதில்லை?
என்ன சொன்னாலும் செய்தாலும், சினிமா எப்போதுமே வியாபாரமயமானதுதான். சந்தை கோரிக்கைதான் பொருளை நிர்ணயிக்கிறது. நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இங்கு திறமைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் தயாரிப்பாளர் ஒரு முதலீட்டாளர். அவரது முதலீட்டுக்கு ஏற்ற லாபம் வர வேண்டும்.
இன்று, திரைப்பட உருவாக்கத்துக்கு அதிக செலவாகும், ஆபத்துகள் அதிகம். நான் இயக்கத்தை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளர் எனது அலைவரிசைக்கு ஏற்றவாரு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.
எனது மகன்களும், பேரன்களும், மதிப்பான படங்களை எடுத்தவனாக தனது படைப்புகள் மூலம் அவர்களை பெருமையடையச் செய்தவனாக என்னை நினைக்க வேண்டும் என விரும்புகிறேன். எனது மகன்கள் யாரும் இந்தத் துறையில் இல்லை. ஏனென்றால் திரைப்படம் எடுப்பது சொத்து போல கை மாற்ற முடியாது. அது ரத்ததில் இருக்க வேண்டும்.
உங்கள் நடிகர்களை கண்டிப்பாக நடத்தியுதுண்டா?
வீட்டில் நான் கோபப்படுவேன். ஆனால் எனது நடிகர்களைப் பார்த்து சத்தம் போட்டதில்லை. தளத்தில் எனது பொறுமையை கண்டு நானே ஆச்சரியப்பட்டதுண்டு. சுதந்திரமான சூழலில் தான் நடிர்களிடமிருந்து சிறப்பான நடிப்பை பெற முடியும் என எப்போது நினைத்திருந்தேன். இது வேண்டுமென்றே கொண்டு வரப்பட்ட அணுகுமுறை அல்ல. நான் தளத்தில் அனைவரிடமும் இயற்கையாகவே பேசிப் பழகி, ,மென்மையாக நடந்து கொள்வேன். ஒருவேளை எனது குழு, எனது நடிகர்கள் என வந்தால் மென்மையாக நடந்து கொள்கிறேனோ என்னவோ!
சமீப காலங்களில் நடிப்புக்கு வந்துவிட்டீர்கள். இது வேண்டுமென்றே எடுத்த முடிவா?
பாடகர் எஸ்.பி.பி, நடிகர் கமல்ஹாசன் இணைந்து தயாரித்த சுப சங்கல்பம் படத்தின் படப்பிடிப்பில், தற்செயலாக எனது நடிப்பின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. சரியான நடிகர் கிடைக்காத ஒரு கதாபத்திரத்தில் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தனர். தொடர்ந்து பல நடிப்பு வாய்ப்புகள் வந்தன. சிலசமயம் உதவி செய்யும் பொருட்டும், சிலசமயங்களில் என் விருப்பத்துக்கும் ஏற்ப நான் நடித்து வந்தேன்.
நடிப்பு என்பது உங்களுக்கு சம்பளத்துடன் கிடைக்கும் விடுப்பு போல, தொடருங்கள் என கமல் எப்போதும் சொல்வார். இது எனக்கு பிரதானம் கிடையாது. பொழுதுப்போக்கு என சொல்லலாம். ஆனால் இப்போது அதையும் குறைத்துவிட்டேன்.
உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு சாதனையாளர். சுயசரிதை எழுதவேண்டும் எனத் தோன்றியதுண்டா?
எனது வாழ்க்கை எளிமையான, சாதாரணமான ஒன்று. ஒரு புத்தகம் விற்க அதில் சாகசம் வேண்டும், நாடகத்தன்மை வேண்டும். இல்லையென்றால அது எப்படி விற்கும்? (சிரிக்கிறார்) பலர் என்னை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்கின்றனர். அவர்களிடம் நான் சொல்வதெல்லாம், எனது படங்களே என் வாழ்க்கை.
எனது தினசரி வாழ்க்கை மற்ற எல்லாரையும் போல் தான் என்றாலும், எனது நம்பிக்கைகளும், சிந்தனைகளும் மாறுபட்டவை. அவை என் திரைப்படங்களில் எதிரொலித்தன. ஒரு நல்ல பார்வையாளர், எனது படங்களைப் பார்த்தால் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.