

தமிழில் ஹிட்டடித்த 'ராஜா ராணி' படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்யவில்லை.. டப்பிங் செய்யவே இருக்கிறோம் என ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான படம் 'ராஜா ராணி'. ஏ.ஆர்.முருகதாஸ் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்திருந்தார்.
தங்களது காதல் தோல்வியை மறக்க முடியாத கணவன் - மனைவிக்கிடையே பாசப் போராட்டத்தை மையப்படுத்தி இருந்தார்கள். படம் இளைஞர்கள், குடும்பத்தினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவியது. தெலுங்கில் தில் ராஜு இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார் என தகவல்கள் வெளியானது.
இத்தகவலை மறுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ். இது குறித்து “'ராஜா ராணி' படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்யவில்லை. டப்பிங் செய்யவே திட்டமிட்டு இருக்கிறோம்.
ரீமேக் குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை. தமிழில் எப்படி இளைஞர்கள், குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றதோ, அதைப் போல தெலுங்கிலும் படம் வரவேற்பைப் பெறும்.
விரைவில் 'ராஜா ராணி' தெலுங்கு டப்பிங் வெளியாகும்.” என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இப்படம் இந்தியில் ரீமேக்கா, டப்பிங்கா என்பது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் எதுவும் தெரிவிக்கவில்லை.