

'சுந்தர பாண்டியன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்காக நடிகர் சுனிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிற்கும், வெற்றி பெற்ற படங்களை மாற்றி மாற்றி ரீமேக் செய்வது ஒன்றும் புதிதல்ல.
சசிகுமார், லட்சுமி மேனன், சூரி மற்றும் பலர் நடிக்க, பிரபாகரன் இயக்கிய படம் 'சுந்தர பாண்டியன்'. தமிழில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலையும் வாரி இறைத்தது.
'தமிழ் படம்', 'திருப்பாச்சி' உள்ளிட்ட படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த பீமினி ஸ்ரீநிவாஸ் ராவ் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்.
இப்படத்தின் ரீமேக் குறித்து “நடிகர் சுனிலிடம் சசிகுமார் வேடத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஒரிரு வாரத்தில் முறையான அறிவிப்பு வெளியாகும்.
சுனில் இப்படத்தினைப் பார்த்து சந்தோஷமாகி விட்டார். ஆகையால் ரீமேக்கில் அவர் நடிக்ககூடும்” என்று தெரிவித்திருக்கிறார்.
'மிஸ்டர் பில்லிகொடுக்கு', 'தடக்கா' என தொடர்ச்சியாக ரீமேக் படங்களில் நாயகனாக நடித்து தனது திரையுலக பயணம் உச்சத்தில் இருப்பதால் இப்படத்தில் நடிக்க சுனில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
தற்போது 'பீமாவரம் புல்லோடு' படத்தில் நடித்து வரும் சுனில், அப்படத்தினை முடித்துவிட்டு 'சுந்தர பாண்டியன்' ரீமேக்கில் நடிப்பார் என தெரிகிறது.