

ராஜமெளலியின் 'பாகுபலி 2'வில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.
உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. இப்படத்தில் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து 'பாகுபலி' படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஷாருக்கான் எங்கள் படத்தில் நடிப்பதை கண்டிப்பாக நாங்கள் விரும்புவோம். யார் விரும்ப மாட்டார்கள் சொல்லுங்கள்? ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது வெறும் வதந்தி மட்டுமே, உண்மையல்ல" என்று தெரிவித்துள்ளது படக்குழு.