

வர்த்தக திரைப்படங்களின் பிடியில் இருந்த கன்னட சினிமாவை, இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்க வைத்த படைப்பு 'லூசியா'. இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் என்றைக்கு 'லூசியா' படத்தைப் பார்த்துவிட்டு ட்வீட் செய்தாரோ, அன்று முதலே 'லூசியா' பல்வேறு திரையுலக விழாக்களில் தனது சிறகை விரித்தது.
தற்போது 'லூசியா' படத்தை தமிழில் சித்தார்த், தீபா சன்னதி நடிக்க 'எனக்குள் ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். 'லூசியா', 'எனக்குள் ஒருவன்' மாற்றம் என இயக்குநர் பவன் குமாரிடம் உரையாடியதில் இருந்து...
'லூசியா' படத்தின் மூலம் கிரவுட் ஃபண்டிங் (crowd funding) என்ற ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்திருக்கிறீர்களே?
கமர்ஷியல் படங்கள் அதிகம் வந்து கொண்டிருக்கிற கால கட்டத்தில், 'லூசியா' போன்ற வித்தியாசமான படங்களுக்கு முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் சற்று தயங்குகின்றனர். அதுமட்டும் அல்ல, வித்தியாசமான படங்கள் ஒருவேளை தோல்வியடைந்தால் அது ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டமாகிவிடும்.
ஆனால் இந்த கிரவுட் ஃப்ண்டிங் மூலம் வித்தியாசமான படங்களை விரும்பும் யாரும் பங்களிக்கலாம். நஷ்டமும் குறைவு. என்னுடைய லூசியா படத்தில் மொத்தம் 1,300 பங்களிப்பாளர்கள் சேர்ந்து ரூ.75 லட்சத்தில் படத்தை முடித்தோம். மூன்று மடங்கு அதிகமாகவே லாபம் பார்த்தோம்.
'லூசியா' குறித்து...
ஒரு சராசரி மனிதன் எப்படி இருக்கிறான், அவன் மனதில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறான் என்பதை பற்றிய கதை. லூசியா என்பது 'லூசிட் டிரீமிங்' (Lucid dreaming) என்ற வார்த்தையின் பெயர்மாற்றம். லூசிட் டிரீமிங் என்பது, கனவு காண்கிறோம் என்று தெரிந்திருந்தும் நிஜமென எண்ணி மூழ்கிக் கிடப்பது என்று பொருள்.
'லூசியா' திரைப்பட இயக்குநரான உங்களுக்கும், 'எனக்குள் ஒருவன்' இயக்குநர் பிரசாத் ராமருக்கும் இடையில் ஒரு இயக்குநராக நடந்த கருத்து பரிமாற்றத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...
கன்னடத்தில் 'லூசியா' படத்தை நானே எழுதி, இயக்கியிருந்தேன். ஆனால் தமிழில் புதுமுக இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கியுள்ளார். லூசியாவை தமிழில் இயக்கவேண்டி வந்தபொழுது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்திற்கான உரிமை அளித்தேன். சில நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டேன். அதைத் தவிர எனது பங்கு எதுவுமில்லை. படத்தை ஒரு புது வடிவமாக அவர்கள் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதனால் நாங்கள் எதிலும் தலையிடவில்லை.
லூசியா படத்தில் இல்லாத ஒன்றாக ஹீரோவான சித்தார்த்தை, நிஜத்தில் கருப்பழகு கொண்டவராகவும், கனவில் சிவப்பழகு தோற்றமுடையவராகவும் உருவகப்படுத்திருப்பதன் காரணம் என்னவாக இருக்கும் இன்று நினைக்கிறீர்கள்? ஏன் இந்த மாற்றம்?
லூசியாவில் ஹீரோவாக சதீஷ் நடித்திருந்தார். கதைகளும் சம்பவங்களும் அவருக்கு ஏற்ற மாதிரியே அமைத்திருந்தோம். அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. சித்தார்த்தை பொருத்தவரையில் ஏற்கெனவே ஒரு ஸ்டாரக, ஹீரோவாக செட் ஆகிவிட்டார். அவரை ஒரு சாதாரண தியேட்டரில் வேலை பார்க்கும் சராசரி மனிதனாக காட்ட இந்த நிறமாற்றம் தேவைப்பட்டிருக்கலாம். ரசிகர்கள் இரண்டு வித்தியாசமான சித்தார்த்தை பார்க்கவேண்டும் என்பதால் அவரை கருப்பாக காட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் படத்திற்காக எந்தளவுக்கு உழைத்திருக்கிறார் என்பது டீஸரை பார்த்த போது உணர்ந்தேன்.
கமல் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தின் டைட்டிலை லூசியா படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு வைத்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சமீபத்தில்தான் 'எனக்குள் ஒருவன்' என்ற கமல் படத்தைப் பற்றி கேள்விபட்டேன். அதே பெயரை 'லூசியா'வின் தமிழ் ரீமேக் படத்திற்கு வைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவன் நிஜத்தில் எப்படி இருக்கிறான் தனக்குள் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான் என்ற லூசியாவின் கதைக்கு பொருத்தமாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தென்னிந்திய சினிமாக்களை ஒப்பிடுகையில், கன்னட சினிமாவுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிடைப்பதில்லையே ஏன்?
அதற்கு மற்ற மொழி சினிமா துறையினர் எங்களைவிட நன்றாக முன்னேறியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமல்ல மக்கள் மாறியுள்ளனர். சினிமாவின் மீதுள்ள அவர்களின் பார்வை மாறியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை கன்னட சினிமாத் துறையினர் உணரவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக நாங்கள் நிறைய முயற்சி செய்து வருகிறோம். விரைவில் அந்த இடைவேளையை குறைப்போம் என்று நம்புகிறேன்.
'எனக்குள் ஒருவன்' படத்தின் வெற்றி எந்தளவிற்கு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?, உங்களது அடுத்த படத்தின் திட்டமிடல் எந்தளவில் இருக்கிறது?
'லூசியா' படம் அளவுக்கு பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திற்காக நிறைய முயற்சிகள் எடுத்தோம். பிரசாத் ராமரும் அந்த அளவுக்கு உழைத்தால் நிச்சயம் லூசியாவை விட பெரிய வெற்றியாக எனக்குள் ஒருவன் படம் இருக்கும்.
எனது அடுத்த படம், இதுவரை யாரும் தயாரிக்காத ஒரு வித்தியாசமான படத்தை உருவாக்க நினைக்கிறேன். என்னை பற்றிய, என் வாழ்க்கை பற்றிய ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறேன். ஆனால் அது எப்போழுது வெளிவரும் என்பது எனக்கே தெரியாது.