

மராத்திய மொழியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சைராட்' திரைப்படம், தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் ரிங்கு ராஜ்குரு, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சைராட்'. நாகராஜ் மஞ்சுளே தயாரித்த இப்படத்தில் அஜய் - அதுல் இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சுமார் 4 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், 100 கோடி அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. மராத்தி மொழியில் வெளியாகி அதிக வசூல் செய்த திரைப்படம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது இப்படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் ராக்லைன் வெங்கடேஷ். "'சைராட்' படத்தின் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ராக்லைன் வெங்கடேஷ் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் முடிவாகிவிடும்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்" என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தார்கள்.