

‘சைரா’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து குறித்து பரவிய வதந்திக்கு, அனுஷ்கா சூசகமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
நரசிம்ம ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருடைய 151-வது படமான இதை, அவர் மகன் ராம் சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, தமன்னா, ‘நான் ஈ’ சுதீப், ஜெகபதி பாபு, அனுஷ்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கெஸ்ட் ரோலில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். சிரஞ்சீவி - நயன்தாரா திருமணக் காட்சியில்தான் அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வருகிறது. ‘பாகுபலி’க்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குப் படம் இதுதான் என்கிறார்கள். 240 கோடி ரூபாயில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘சைரா’ படத்தின் படப்பிடிப்பின்போது, ஆக்ஷன் காட்சியில் நடித்த அனுஷ்காவுக்கு அடிபட்டதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. மிகப்பெரிய காயம் என்பதால், அவர் தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த வதந்திக்கு சூசகமாக மறுப்பு தெரிவித்துள்ளார் அனுஷ்கா. “நான் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளேன். தற்போது சியாட்டில் நகரத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன்” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
சியாட்டில், அமெரிக்க மாகாணமான வாஷிங்டனில் உள்ள ஒரு நகரமாகும். மாதவன் ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்புதான் அங்கு நடைபெற்று வருகிறது. ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
கோபி மோகன் மற்றும் கோனா வெங்கட் இருவரும் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். மேலும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் கோனா வெங்கட் பணியாற்றுகிறார். மாதவன், அனுஷ்காவுடன் இணைந்து அஞ்சலி, ஷாலினி பாண்டே இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைலன்ட் சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது.