2 வயது மகள் பலி: உயிருக்கு போராடும் பெற்றோர்: கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பாலாபாஸ்கர்

2 வயது மகள் பலி: உயிருக்கு போராடும் பெற்றோர்: கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பாலாபாஸ்கர்
Updated on
1 min read

திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது 2 வயது மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மலையாள திரையுலகின் இளம் இசைமைப்பாளர் பாலாபாஸ்கர். 12 வயது முதல் மேடைகளில் இசைக்கச்சேரி நடத்தி வந்த பாலாபாஸ்கர் சிறந்த வயலின் இசைக்கலைஞர். 17 வயதில் இவர் இசையமைத்த மாங்கல்ய பல்லாக்கு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் திருச்சூரில் உள்ள கோயிலுக்கு, மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வி ஆகியோருடன் அவர் காரில் சென்றார். ஓட்டுநர் அர்ஜூன் காரை ஓட்டினார். வழிபாடு முடித்து விட்டு அவர்கள் காரில் திருவனந்தபுரம் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

திருவனந்தபுரம் அருகே பள்ளிபுரம் பகுதியில் இன்று காலை காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பாலாபாஸ்கர் மற்றும் குடும்பத்தினர் பலத்த காயமடைந்தனர்.

மகள் தேஜஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலாபாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் அர்ஜூனுக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in