

நாகர்ஜுனா ஜோடியாக ‘மன்மதுடு 2’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
‘மாஸ்கோவின் காவேரி’, ‘வணக்கம் சென்னை’, ‘யூ டர்ன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராகுல் ரவீந்திரன். ஏற்கெனவே தெலுங்கில் ‘சி லா சௌ’ என்ற வெற்றிப் படத்தை ராகுல் இயக்கியுள்ளார். தற்போது, 2002-ம் ஆண்டு நாகர்ஜுனா - சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியான ‘மன்மதுடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
‘மன்மதுடு 2’ படத்தில் நாகர்ஜுனா மீண்டும் நாயகனாக நடிக்க, ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். கடந்த மார்ச் 25-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நாகர்ஜுனா மற்றும் பி.கிரண் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
சைத்தன் பரத்வாஜ் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், நாசர், தேவதர்ஷினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதில், நாகர்ஜுனா ஜோடியாக, சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். நாகர்ஜுனா - சமந்தா சம்பந்தப்பட்டக் காட்சியின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த நாகர்ஜுனா, “சமந்தாவுடன் நடிப்பது மகிழ்ச்சிகரமான விஷயம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவரும் நாகர்ஜுனா ஜோடியாக நடித்துள்ளார். நாகர்ஜுனா - கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் பகிர, அதை ரீ ட்வீட் செய்துள்ள கீர்த்தி சுரேஷ், “நாகர்ஜுனா சாருடன் கெஸ்ட் ரோலில் நடிப்பதும், ‘மன்மதுடு 2’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதும் கவுரவமான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.