

நிவின் பாலியின் அடுத்த படம் படவேட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. தமிழகத்திலும் இவருக்கென ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது இவரது அடுத்த படத்தைப் பற்றிய செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
படவேட்டு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரை நிவின் பாலி பதிவிட்டுள்ளார். எனது அடுத்த படம் படவேட்டு என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது அன்பார்ந்த நண்பர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். லிஜு கிருஷ்ணா இயக்குகிறார். மேற்கொண்டு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று நிவின் பாலி குறிப்பிட்டுள்ளார். கிராம, விவசாயம் சார்ந்த கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது. கலைநயத்துடன் ஒரு ஓவியம் போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிஜு கிருஷ்ணாவுக்கு இது முதல் படம். தயாரிப்பாளர் சன்னி வைனுக்கும் இது முதல் படம். இவர் இதற்கு முன் 2012ல், துல்கர் சல்மானுடன் செகண்ட் ஷோ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த வருடம் வெளியாகி வரவேற்பு பெற்ற ஜூன் படத்திலும் நடித்திருந்தார். தமிழில் ஜிப்சி படத்தில் நடித்துள்ளார்.