

‘கபீர் சிங்’/‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஆணாதிக்கச் சிந்தனை பற்றிப் பேசவில்லை என இயக்குநர் சந்தீப் வங்கா கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து, தற்போது வெளியிடவும் தயாராக உள்ளனர். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநர் சந்தீப் வங்காவே இந்தி ரீமேக்கையும் இயக்கியுள்ளார்.
ஷாகித் கபூர், கியாரா அத்வானி இருவரும் நாயகன் - நாயகியாக நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் படத்தின் நாயகன் கதாபாத்திரம் ஆணாதிக்கத்தன்மை நிறைந்தவராக இருக்கிறார், அவரது காதலியை மோசமாக நடத்துகிறார், இதுபோன்ற படங்கள் இளைஞர்களிடையே தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை, ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியானபோது ஏற்கெனவே எழுந்த விமர்சனங்கள்தான்.
மேலும், சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ஷாகித் கபூரிடம் ஒரு பெண் பத்திரிகையாளர் இதுபற்றிக் கேட்க, அவரும் அதற்கு சரியானதொரு பதிலைச் சொன்னது இணையத்தில் வைரலானது.
இந்தப் படம் ஆணாதிக்கச் சிந்தனையை விளம்பரப்படுத்துகிறது என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? என்று இயக்குநர் சந்தீப் வங்காவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது.
இதற்கு அவர், "நான் பேசுவது கர்வத்தால் அல்ல. ஆனால், நான் இந்தப் போலிப் பெண்ணியவாதிகள், போலி அனுதாபிகளைப் பற்றி சுத்தமாகக் கவலைப்படுவதில்லை. நான், எனது படத்தில் எந்த இடத்திலும் பெண் கதாபாத்திரத்தைத் தரக்குறைவாகக் காட்டவில்லை. அவர்கள் அங்கங்களை மட்டும் தனியாகப் படம்பிடித்துக் காட்டவில்லை. அந்தப் பெண்ணின் உடலைப் பாருங்கள் என்று நான் என் ரசிகர்களிடம் சொல்லவில்லை" என்று பதில் சொல்லியிருக்கிறார்.