

இன்று (ஜூன் 27) வெளியிடப்படுவதாக இருந்த ‘காப்பான்’ படத்தின் தெலுங்கு தலைப்பு, நடிகை விஜய நிர்மலா மறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘காப்பான்’. சயீஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மூவரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
சூர்யாவின் 37-வது படமான இதில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். கடந்த வருடம் (2018) ஜூன் 25-ம் தேதி இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, தெலுங்கில் இந்தப் படத்தின் தலைப்பு என்னவென்று இன்று அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தனர். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ட்விட்டரில் தலைப்பை அறிவிப்பதாக இருந்தது.
ஆனால், நடிகையும் இயக்குநருமான விஜய நிர்மலா இன்று காலமானதால், தெலுங்கு தலைப்பின் அறிவிப்பு நாளை (ஜூன் 28) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கே.வி.ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.