Published : 10 Jun 2019 10:27 AM
Last Updated : 10 Jun 2019 04:22 PM
எழுத்தாளரும், நாடக மற்றும் திரைப்பட கலைஞருமான கிரிஷ் கர்னாட் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.
கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட மொழி எழுத்தாளர் கிரிஷ் கர்னாட். 1938 ஆம் ஆண்டு, மே 19-ம் தேதி மும்பையில் பிறந்த இவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு அவர் ‘யாயதி' என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்' (1964) மற்றும் ‘ஹயவாதனா' (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது.
கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்தார். உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா' என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார்.
தமிழில் 'காதலன்', 'ரட்சகன்', 'ஹேராம்', '24' போன்ற படங்களில் குணச்சித்ர, வில்லன் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தார்.
கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற விருதுகளும் பெற்றவர்.
நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என நாடக, திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த அவர், சமீபகாலமாக உடல்நலம் குன்றி இருந்தார். பெங்களூருவில் வசித்து வந்த அவர் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள், கலைஞர்கள் பல்வேறு துறை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.