எம்புரான் - லூசிஃபர் இரண்டாம் பாகம் அறிவிப்பு

எம்புரான் - லூசிஃபர் இரண்டாம் பாகம் அறிவிப்பு
Updated on
1 min read

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாகத்துக்கு 'எம்புரான்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம், கேரளத் திரையுலகின் பல்வேறு வசூல் சாதனைகளை குறுகிய காலத்தில் முறியடித்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முரளி கோபி திரைக்கதை எழுத, மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய், இந்திரஜித் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை இயக்கியவர் நடிகர் பிரித்விராஜ். 'லூசிஃபர்' படம் முடியும்போதே, அடுத்த பாகத்துக்கான முன்னோட்டத்தோடு முடியும். எனவே கண்டிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். தற்போது அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

'லூசிஃபர்' படத்தின் கடைசிக் காட்சியை, 'எம்புரான்' படத்தின் டீஸர் போல பகிர்ந்துள்ளனர் நடிகர் மோகன்லாலும், இயக்குநர் பிரித்விராஜும். இது 'லூசிஃபர்' படத்தின் முன் கதை, தொடர்ச்சி என இரண்டும் கலந்து இருக்கும் என்று பிரித்விராஜ் கூறியுள்ளார். 'காட் ஃபாதர் 2' படத்தின் திரைக்கதை பாணியை ஒட்டி இருக்கலாம் என இப்போதிருந்தே ரசிகர்கள் யூகிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அறிவிப்பு இப்போது வந்தாலும் படப்பிடிப்பு அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் தான் தொடங்கவுள்ளது. அதனால் படத்தின் வெளியீடு தேதி பற்றி எதுவும் பகிரப்படவில்லை. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கேரளாவிலேயே நடக்கும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in