மகரிஷி படத்துக்கு வரவேற்பு: 17 ஆண்டு பயணத்தைக் குறிப்பிட்டு அல்லரி நரேஷ் நெகிழ்ச்சி

மகரிஷி படத்துக்கு வரவேற்பு: 17 ஆண்டு பயணத்தைக் குறிப்பிட்டு அல்லரி நரேஷ் நெகிழ்ச்சி
Updated on
1 min read

'மகரிஷி' படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதை முன்னிட்டு, தனது 17 ஆண்டு திரையுலகப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அல்லரி நரேஷ்.

வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மகரிஷி'. மகேஷ்பாபுவின் 25-வது படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், வைஜெயந்தி மூவிஸ் மற்றும் பிவிபி சினிமாஸ் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளதால், அதற்கான வசூல் வரும் என்று படக்குழு நம்பிக்கையில் உள்ளது.

இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அல்லரி நரேஷ் நடித்துள்ளார். தற்போது தனது 17 ஆண்டு திரையுலகப் பயணத்தை மிகவும் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''17 வருடங்களுக்கு முன், ஒரு இளைஞன் அவனுக்கான பாதையைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இந்தத் துறையில் தனக்கென ஒரு சின்ன வாய்ப்பாவது இருக்குமா என்பது கூட அவனுக்குத் தெரியாது. ஆனாலும் தன் உள்ளுணர்வு சொன்னதை பிடிவாதமாக பிடித்துக் கொண்டான்.

மே 10, 2002 அன்று அந்த இளைஞன் அல்லரி நரேஷாக மீண்டும் பிறந்தான். என்னை மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு திரைப்படம். மிகவும் அரிய தருணம் அது. என்னைப் போன்ற வித்தியாசமான, ஒல்லியான, பெரிய கனவுகள் இருப்பவனைத் தேர்ந்தெடுத்த படக்குழுவுக்கு நான் என்றென்றும் கடன்பட்டிருப்பேன்.

இதை ஏன் இப்போது சொல்கிறேன்? ஏன் தெலுங்கு சினிமா துறையில் எனது 17-வது வருடத்தில் இருக்கும்போது சொல்கிறேன். ஏனென்றால் ரவி என்பவன் ஒரு முழு சுற்று வந்துவிட்டான். 'அல்லரி' படத்தில் ரவி என்ற கதாபாத்திரத்திலிருந்து, 'மகரிஷி' படத்தில் ரவி கதாபாத்திரம் வரை, இந்த 55 படங்கள் தனது அனுபவம் என்றும் மறக்க முடியாதவை, மன நிறைவைத் தருபவை.

என்னை வளர்த்தெடுத்து, நான் வாழ ஒரு காரணத்தைக் கொடுத்த துறைக்கும், என் அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக்  கலைஞர்களுக்கும், என்மீது என்றும் குறையாத நம்பிக்கை வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், என்றும் நன்றியுள்ள நரேஷ் அடக்கத்துடன், மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு அல்லரி நரேஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in