

ஆந்திராவில் நடைபெறும் ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி மீண்டும் 'லட்சுமி என்.டி.ஆர்' படத்தை வெளியிடவுள்ளார் ராம் கோபால் வர்மா
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'லட்சுமி என்.டி.ஆர்' என்ற படத்தை இயக்கியுள்ளார் ராம்கோபால் வர்மா, என்.டி.ராமாராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆந்திராவில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக வந்த ராம்கோபால் வர்மாவை போலீஸார் தடுத்து நிறுத்தி ஹைதராபாத்துக்கே திருப்பி அனுப்பினர். கடும் போராட்டத்துக்குப் பிறகே மே 1-ம் தேதி வெளியிட்டார்கள். அச்சமயத்தில் அனைத்து திரையரங்குகளிலும் படம் திரையிடுவதை நிறுத்தி விட்டார்கள் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா குற்றம்சாட்டினார்
தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு படுதோல்வியை தழுவியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி பெருவாரியாக தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆந்திர முதல்வராக மே 30-ம் தேதி பதிவேற்கவுள்ளார்.
இந்த மாற்றத்தை முன்வைத்து மீண்டும் 'லட்சுமி என்.டி.ஆர்' படத்தை வெளியிடவுள்ளார் ராம் கோபால் வர்மா. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “மே 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதிவியேற்கவுள்ளார். மே 31-ம் தேதி 'லட்சுமி என்.டி.ஆர்' படம் வெளியாகவுள்ளது.
இந்த கோடை வெயிலில் இப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நாளை (மே 26) மாலை 4 மணிக்கு காந்தி நகர் பிலிம் சேம்பரில் நடைபெறும். மும்பையிலிருந்து விஜயவாடாவுக்கு விமானத்தில் வருகிறேன். மதியம் 1 மணிக்கு விஜயவாடாவில் இருப்பேன். சந்திரபாபு நாயுடு போலீஸாரை விட ஜெகன் மோகன் ரெட்டி போலீஸார் எங்களை மரியாதையுடன் நடத்துவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.