

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சாஹோ' படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இப்படம், ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் இச்சமயத்தில், படத்தின் இசையமைப்பாளர்களாகப் பணிபுரிந்து வந்த ஷங்கர் - இஷான் - லாய் குழுவினர் விலகி, படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தனர். இதனால், இசையமைப்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்தது.
தற்போது படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'சாஹோ' படத்தின் பின்னணி இசைப் பணியை ஜிப்ரான் மேற்கொள்ளவுள்ளார். படத்தின் பாடல்களை வேறொரு இசையமைப்பாளர் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜித்தின் முதல் படமான 'ரன் ராஜா ரன்'-ல் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஜிப்ரான். அந்த நட்பின் அடிப்படையிலேயே 'சாஹோ' படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைக் கொடுத்துள்ளார் சுஜித்.
'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் பிரபாஸுடன் நடித்துள்ளனர். ஹைதராபாத், மும்பை, அபுதாபி, துபாய், ரொமேனியா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் பட்ஜெட்டில் ஒரு முக்கியப் பங்கு சண்டைக் காட்சிகளுக்காகவே செலவிடப்பட்டுள்ளது.
'சாஹோ' பணிகளை முடித்துவிட்டு, கே.கே.ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதுவும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.