

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’, ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவைத் தாண்டி, இந்தியா முழுவதும் இவருக்குப் பல ரசிகர்கள் கிடைத்தனர். தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
‘அர்ஜுன் ரெட்டி’யைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸி வாலா’ படங்களும் சூப்பர் ஹிட். இத்தனைக்கும் ரிலீஸாவதற்கு சில தினங்களுக்கு முன்பே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது ‘டாக்ஸிவாலா’. ஆனால், அதையும் மீறி அந்தப் படத்தை வெற்றிபெற வைத்தனர் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள்.
தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘டியர் காம்ரேட்’ படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. பரத் கம்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடித்துள்ளார். ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இவர்கள் ஏற்கெனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதி ராமச்சந்திரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம், வருகிற ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் இந்தப் படத்தை மே 31-ம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். ஆனால், எல்லா மொழிகளிலும் சரியான தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதால், காத்திருந்து ஜூலை மாதம் ரிலீஸ் செய்கின்றனர்.