

ஆந்திர மாநிலம், கோக்காபேட்டையில் அமைத்திருந்த சிரஞ்சீவியின் ’சைரா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று (மே 3) காலை தீ விபத்து ஏற்பட்டது.
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, சுதீப் என நட்சத்திரப் பட்டாளம் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங், கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வருகிறது.
மிகப் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இத்திரைப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார். இதனால், ஆந்திர மாநிலம், ரங்காரெட்டி பகுதியிலுள்ள கோக்காபேட்டை என்ற இடத்தில் இருக்கும் நடிகர் சிரிஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்திலேயே பிரமாண்ட கோட்டை போன்று செட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செட்டில்தான் படத்தின் பெரும் பகுதி படமாக்கப்பட்டு வருகிறது.
மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது . உயிர்ச் சேதம் ஏதும் இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.