

ஆன்லைன் அச்சுறுத்தல்கள், கூலிப்படைகளை ஏவுவதற்கு சமம் என்று நடிகை பார்வதி கடுமையாகச் சாடியுள்ளார்.
மனு அசோகன் இயக்கத்தில் பார்வதி நாயர், டோவினோ தாமஸ், ஆஷிப் அலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'உயிரே'. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டப் பெண்ணாக பார்வதி நடித்துள்ளார்.
'உயிரே' படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார் பார்வதி. அதில், 'சமூக ஊடகங்களில் உங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்களை எப்படிக் கையாள்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
சகிப்பின்மையின் உச்சத்தை நாங்கள் கையாண்டு கொண்டிருக்கிறோம். எதிர்ப்புகளைப் பதிவு செய்வதில் ஒரு மாண்பை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. எப்போதும் கும்பல் மனப்பான்மையில் இருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதுவும் ஒருவித பிரச்சாரம்தான்.
அடுத்தவரை நோகடிப்பதை, அவர்கள் ஓர் உத்தியாகவே கடைபிடிக்கின்றனர். இப்படியான நெருக்கடியை ஏற்படுத்துவதால் எதிராளியை மவுனப்படுத்தலாம் என நினைக்கின்றனர். ஆனால், இத்தகைய சமூக ஊடக உத்தியை எல்லோருமே தெரிந்து வைத்திருக்கின்றனர். இவர்களை விடவும் பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருக்கின்றனர். வேலையற்றவர்கள்தான் இதுபோன்ற தாக்குதல்கள் மூலமாவது தங்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்காதா எனத் திரிவார்கள்.
சில நேரங்களில் கொலை, பலாத்கார மிரட்டல்கள் கூட விடுப்பார்கள். ஆன்லைன் அச்சுறுத்தல்கள், கூலிப்படைகளை ஏவுவதற்கு சமமே. இருந்தாலும், இந்நேரத்தில் நான் கண்ணியமாகப் பேச முடிகிறது என்றால், அதற்கு என்னைப் போன்ற அச்சுறுத்தலுக்குள்ளானவர்களும் கூட உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பதே காரணம்.
இவ்வாறு பார்வதி தெரிவித்துள்ளார்.