ஜெர்சி படத்துக்கு இணையத்தில் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை
'ஜெர்சி' படத்துக்கு இணையத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜெர்சி'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மேலும், முன்னணி திரையுலக பிரபலங்களும் 'ஜெர்சி' படத்தை புகழ்ந்து தங்களது சமூகவலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றின் தொகுப்பு இதோ:
ஜூனியர் என்.டி.ஆர்: ’ஜெர்சி’ என்னை ரோலர் கோஸ்டரில் அழைத்துச் சென்ற ஒரு அற்புதமான படம். இப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து அதை முழு அர்ப்பணிப்போடு தந்த கவுதம் தின்னூரிக்கு வாழ்த்துகள். கவுதமின் கனவுக்கு சிறப்பாக ஆதரவு கொடுத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். நானி, பந்தை மைதானத்துக்கு வெளியே அடித்தது போன்ற அட்டகாசமான நடிப்பு. அற்புதம் அற்புதம் அற்புதம். உங்கள் நடிப்பை நான் நீண்ட நாள் நினைவில் வைத்துக் கொள்வேன். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது.
அல்லு அர்ஜுன்: இப்போதுதான் ’ஜெர்சி’ பார்த்தேன். இதயத்தைத் தொடும் அற்புதமான படம். படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்தேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். நானி, இதுவரை வந்ததில் உங்கள் சிறந்த படம், சிறந்த நடிப்பு இது. கலக்கிவிட்டீர்கள். எல்லா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை தந்திருந்தார்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அனிருத் இருவரும் அற்புதம். முக்கியமாக இயக்குநர் கவுதம் தின்னூரி. சிறந்த உழைப்பு. தைரியமான முயற்சி. இனிமையான படம். சினிமா விரும்பிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
இயக்குநர் கோபி மோகன்: ’ஜெர்சி’ ஒரு அட்டகாசமான படம். அற்புதமான உழைப்பு. நானி அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் அருமையான நடிப்பு. இயக்குநர் கவுதமின் எழுத்து மிகச்சிறப்பாக இருந்தது. அவரது பார்வையும், திரையாக்கமும் தரம். அனிருத் இசை அருமை. குழுவுக்கு வாழ்த்துகள்.
மனோஜ் மஞ்சு: இப்படி உணர்ச்சிகளால் உண்டான அழகான படத்தைத் தந்த இயக்குநர் கவுதமுக்கும், நானிக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். ஒட்டுமொத்த ’ஜெர்சி’ டீமுக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
சுதீர் பாபு: ’ஜெர்சி’ கொண்டாடப்படும். நினைவில் நிற்கும். படம் என் மனதிலேயே இருக்கிறது. நானியின் நடிப்பின் மீது காதல் வயப்பட்டுள்ளேன். அற்புதம் இயக்குநர் கவுதம். ஷ்ரத்தா ஸ்ரீநாத் தரமான நடிப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயக்குநர் மெஹர் ரமேஷ்: நம் இனிய நானியின் தங்கல் தான் ’ஜெர்சி’. அர்ஜுன் கதாபாத்திரத்தில் அவர் மிளிர்கிறார். நம்மை பெருமைப்பட வைத்து நம் இதயங்களை மீண்டும் தனது நடிப்பின் மூலம் வென்று விட்டார். இயக்குநர் கவுதம் தின்னூரி, அருமையான, நல்ல கதையைக் கொண்ட படம். கண்டிப்பாக வெற்றி பெறும்.
அல்லரி நரேஷ்: பெருமைப்படுகிறேன் நானி. தலை வணங்குகிறேன். முன்னேப்போதையும் விட பிரகாசமாக இருந்தீர்கள். இப்படி ஒரு அருமையான படத்தைத் தந்த இயக்குநர் கவுதமுக்கு என் வணக்கங்கள். தெலுங்கு சினிமாவில் உங்களை இன்னும் பல படங்களில் பார்க்க விரும்புகிறேன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்களே.
இயக்குநர் மாருதி: விளையாட்டைச் சார்ந்த அற்புதமான படம் ’ஜெர்சி’. நானி அவர்களின் நடிப்பு இதயத்தைத் தொடுகிறது. படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. இயக்குநர் கவுதமின் நேர்மை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை அருமை. தயாரிப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
