

'லூசிஃபர்' படத்தின் காட்சி கேரள காவல்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக முதல்வருக்குப் புகாரையும் அனுப்பியுள்ளனர்.
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லூசிஃபர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிக்கு, கேரள காவல்துறையினர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படத்தில் மோகன்லால் காவல்துறை அதிகாரியின் ஒருவரது நெஞ்சில் கால்வைத்து நிற்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இதையே போஸ்டராக உருவாக்கி, அதை விளம்பரமாகவும் வெளியிட்டார்கள். இதற்குதான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக கேரள காவல்துறையினர் சங்கம், முதல்வர் அலுவலகத்துக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
''இதுபோன்ற போஸ்டர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் போனால் அக்கிரமம் உண்டாகும். முன்னால் க்ரிமினல்கள் தான் போலீஸை தாக்கிக் கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் நமது இளைஞர்களே அத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
புகை பிடிப்பது, மது குடிப்பது, ஹெல்மட் அணியாமல் வண்டி ஓட்டுவது போன்ற திரைப்படக் காட்சிகள் இருந்தால், திரையிலும், போஸ்டரிலும் எச்சரிக்கை செய்தி இருக்கும். போலீஸைத் தாக்கும் இதுபோன்ற காட்சிகள் மற்றும் போஸ்டர்களையும் சடத்துக்குப் புறம்பானதாக மாற்ற வேண்டும்''.
இவ்வாறு கேரள காவல்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.