ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் காயம்: தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் ஆர்.ஆர்.ஆர்

ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் காயம்: தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் ஆர்.ஆர்.ஆர்
Updated on
1 min read

ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ஹைதராபாத் படப்பிடிப்பைத் தொடர்ந்து, புனேவில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள், ராம் சரணுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. புனேவில் படப்பிடிப்புக்காக நடிகர்களிடம் வாங்கப்பட்ட தேதிகள் அனைத்துமே வீணானது. இந்தப் பின்னடைவைச் சமாளிக்க ஜூனியர் என்.டி.ஆர். சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினர்.

தற்போது அவருக்கு கை மணிக்கட்டில் அடிபட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாயகர்களுக்குமே அடிபட்டுள்ளதால், மே மாதத்தில் அடுத்த ஷெட்யூலுக்காகத் தயாராகி வருகின்றனர். அதற்குள் இரண்டு நாயகர்களுக்கும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

ஹாலிவுட் நாயகி டைய்சி விலகல், நாயகர்களுக்கு ஏற்பட்டுள்ள அடி என தொடர்ச்சியாகப் பின்னடவைச் சந்தித்து வருகிறது படக்குழு. படத்தின் வெளியீட்டு தேதியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட ரூ. 350 கோடி முதல் ரூ. 400 கோடி வரை படத்தின் பட்ஜெட் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in