இன்ஸ்டாகிராமில் சேர்ந்த பிரபாஸ்: ஒரு பதிவும் போடாமலேயே 7 லட்சம் ரசிகர்கள்

இன்ஸ்டாகிராமில் சேர்ந்த பிரபாஸ்: ஒரு பதிவும் போடாமலேயே 7 லட்சம் ரசிகர்கள்
Updated on
1 min read

சமூக ஊடகங்களின் வருகைக்கு முன்பும் பின்பும் மாறாத ஒரே விஷயம் ரசிகர் மனப்பான்மையும், நட்சத்திர வழிபாடும்.

போஸ்டர் ஒட்டி பாராட்டி, கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து, ரசிகர் மன்றம் வைத்து ஆராதனை செய்யும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் பேஜ், குழு ஆரம்பித்து தங்களுக்குப் பிடித்தமான நட்சத்திரங்களைப் பற்றிய செய்திகள், படங்களைப் பகிர்வது, நட்சத்திரங்களின் பக்கத்துக்குச் சென்று லைக் போடுவது, அவர்கள் பதிவுகளைப் பகிர்வது என நவீன ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்றன.

இன்னொரு பக்கம் இது நட்சத்திரங்களுக்கும் ஒருவகையில் சாதகமே. பைசா செலவில்லாமல் ஒரு புகைப்படம், ஒரு அறிக்கை, ஒரு சின்ன லைக், கருத்து என தட்டிவிட்டால் போதும். அவர்களைப் பின் தொடரும் ரசிகர்கள் அதை வைரலாக்கி, ஊடகங்களில் செய்தியாக்கி விடுவார்கள். ஒரு நட்சத்திரத்தை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களை வைத்து அவர்களின் புகழ் எவ்வளவு என்பதை மதிப்பிடும் காலம் இது.

'பாகுபலி' படங்களின் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் பொதுவில் காட்டாத, பேசாத ஒரு சில நட்சத்திரங்களில் பிரபாஸும் ஒருவர். சமூக வலைதளங்களில் இவருக்கான பக்கங்கள் இருந்தாலும் இவரது நடமாட்டம் அங்கெல்லாம் குறைவே.

தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் பிரபாஸ். இந்தத் தகவல் தெரிந்ததுமே கிட்டத்தட்ட 7.5 லட்சம் பேர் அவரை அங்கு தொடர ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் அவர் அதில் இன்னும் ஒரு பதிவைக் கூடப் போடவில்லை. ஏன் தனது ப்ரொஃபைல் படத்தைக் கூட வைக்கவில்லை.

ஆனால் அதற்குள் இத்தனை லட்சம் பேர் அவரது வரவை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர். பெர்சனல் பக்கங்களை இதுவரை அதிகம் பகிராத பிரபாஸ் இனி இன்ஸ்டாகிராம் மூலமாகவாவது ஏதாவது சில விஷயங்களைச் சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in