

அமெரிக்காவின் ‘ The World's Best’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற லிடியன் இசையின் மந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
'தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்' என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.
சாம்பியன் பட்டத்துடன் சென்னை வந்த லிடியனை ரஹ்மான் நேரில் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ரஹ்மான் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
''லிடியன் இசையின் மந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இசையின் சர்வதேச தூதராக லிடியன் நியமிக்கப்பட வேண்டும்'' என்று ரஹ்மான் தெரிவித்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற லிடியன் எதிர்காலத்தில் தனியாக இசையமைத்து ஆல்பம் வெளியிட வேண்டும் என்றும் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.