

பாகுபலியில் தமன்னா நடித்த அவந்திகா கதாபாத்திரத்தை நினைத்து தான் பெருமை கொள்வதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார்.
'பாகுபலி' 1 மற்றும் 2 என இரண்டு படங்கள் மூலம் சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கென புது அடையாளத்தை உருவாக்கியவர் ராஜமௌலி.
பாகுபலி, பல்வாள் தேவன், தேவசேனா, ராஜ மாதா சிவகாமி என படத்தின் கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பிரபலமாயின. இதில் தமன்னா அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதல் பாகத்தில் இந்தக் கதாபாத்திரத்தின் சித்தரிப்பு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து சமீபத்தில் நடிந்த ஹார்வர்ட் இந்தியா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜமௌலியிடம் கேள்வியெழுப்பப் பட்டது.
''ஆரம்பத்தில் அவந்திகா கதாபாத்திரம் குறித்து விமர்சனங்கள் வரும்போது அதிகம் வருத்தப்பட்டேன். கடும் கோபமும் வந்தது. சரி, இங்கு பல விதமான மக்கள் இருக்கின்றனர். எனவே விமர்சனங்கள் பெரிதல்ல என நினைத்தேன். என்னைப் பொறுத்தவரை அவந்திகா என்ற கதாபாத்திரம், அந்தப் பாடல் எல்லாமே அழகிய கலை வடிவம். விமர்சனங்கள் வர ஆரம்பித்த போது சிலர் கதையிலும் குற்றம் சொல்ல ஆரம்பித்தனர்.
சம்பந்தமே இல்லாமல் மாற்றிப் பேச ஆரம்பித்தனர். இன்று மீண்டும் 'பாகுபலி' எடுக்கிறேன் என்றால் அவந்திகா கதாபாத்திரத்தில் ஏதாவது மாற்றுவேனா? ஒரு காட்சியைக் கூட மாற்ற மாட்டேன். நான் உருவாக்கிய கலையை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்''.
இவ்வாறு ராஜமௌலி பதிலளித்துள்ளார்.
தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிக்கும், 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இதுவும் பாகுபலி போன்றே மிகப் பிரம்மாண்டமாக, கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.