

வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் ‘லக்ஷ்மி’ஸ் என்.டி.ஆர்’ திரைப்படம், மார்ச் 29-ம் தேதி வெளியாகும் என இயக்குநர் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
ஆந்திராவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து, தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து, மாநிலத்தின் முதல்வராகவும் இருந்த என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம், ஏற்கெனவே பாலகிருஷ்ணா நடிப்பில் ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’, ‘மஹாநாயகுடு’ என இரண்டு பாகங்களாக வெளியாகி, படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி லக்ஷ்மி பார்வதியின் பார்வையில், ‘லக்ஷ்மி’ஸ் என்.டி.ஆர்’ என்ற திரைப்படத்தை ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். சர்ச்சைகளுக்குப் பெயர்பெற்ற வர்மா, இந்தப் படத்தை அறிவித்ததில் இருந்தே என்.டி.ஆர் அபிமானிகளிடமும், சந்திரபாபு நாயுடு அபிமானிகளிடமும் தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.
முதலில் இந்தப் படம் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியம் தேர்தலைக் காரணம் காட்டி படத்தைப் பார்க்க மறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து, தணிக்கை வாரியத்துக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும், இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் வர்மா அறிவித்தார்.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. இந்த வழக்கு விவகாரமும், பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்தானது. தணிக்கை வாரியத்துடனான தவறான புரிதல் தற்போது தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது என வர்மா ட்விட்டரில் அறிவித்தார்.
இதனிடையே, தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர் ஒருவர், இந்தப் படத்தின் வெளியீட்டை ஏப்ரல் 11-ம் தேதி வரை தடைசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை இந்தப் படம் தவறாக சித்தரித்துள்ளதாகவும், ஆந்திராவில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி இது வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அந்த மனுவில் காரணங்கள் குறிப்பிடப்பட்டன. மேலும், ‘லக்ஷ்மி’ஸ் என்.டிஆர்’ மற்றும் ‘லக்ஷ்மி’ஸ் வீரகிரந்தம்’ என இரண்டு படங்களுக்கும் எதிராக ஒரு பொதுநல வழக்கும் தெலங்கானா நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
ஆனால், “மற்றவரது கருத்தை ஒடுக்க முடியாது. இரண்டு படங்களுமே அரசியல் சார்ந்த படங்களாக இருந்தாலும், கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது. படம் வெளியான பிறகு ஏதேனும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால், அதை சமாளிக்க அரசும் காவல்துறையும் தயாராக இருக்கும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பிறகு மார்ச் 29-ம் தேதி படம் வெளியாகுமா இல்லை அதற்குள் வேறொரு பிரச்சினை வந்து படம் முடக்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.