நான் உண்மையைப் பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும்: ப்ரியா பிரகாஷ் வாரியர்

நான் உண்மையைப் பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும்: ப்ரியா பிரகாஷ் வாரியர்
Updated on
1 min read

நான் உண்மையைப் பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும் என ப்ரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்தார்.

ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஒரு அடார் லவ்'. 'மாணிக்க மலராய பூவி' பாடல், ப்ரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் வைரல் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் காதலர் தினத்தன்று வெளியானது. ஆனால், மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று, படுதோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலில் தனக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது என்றும், ப்ரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டனர் என்று நூரின் ஷெரீஃப் தெரிவித்தார்.

அதன்பின் இயக்குநர் ஓமர் லுலு அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியொன்றில், "அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் படத்தை இன்னும் நல்ல தரத்தில் எடுக்கலாம் என தயாரிப்பாளரிடம் சொன்னேன். ஆனால், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில், ப்ரியா வாரியரை பிரதானமாக வைத்து படத்தை எடுக்கச் சொன்னார்.

அதற்குமுன் படத்தின் கதை வேறுவிதமாக இருந்தது. இளம் ஜோடியின் மரணத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஆனால், அது நடக்கவில்லை. தயாரிப்பாளர்கள், ப்ரியாவை முதன்மைப்படுத்தி வேறொரு வகையில் படத்தை எடுக்கச் சொன்னார்கள். உண்மையில் இதே படத்தில் கதா ஜான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நூரின் ஷெரீஃப், ப்ரியா பிரகாஷ் வாரியரைவிட திறமையான நடிகை" என்றார்.

இந்நிலையில், இந்த விஷயம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ப்ரியா பிரகாஷ் வாரியர். அதில், “நான் உண்மையைப் பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும். ஏன் அவர்களைப் போல இருக்க வேண்டும்? நான் அமைதியாக இருக்கிறேன். ஏனென்றால், என்ன ஆனாலும் கர்மா பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in