

தனது அடுத்த படமான ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் உறுதுணை கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியுள்ளார்.
’பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை அறிவித்தார். படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, நாயகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ராஜமௌலி, "எனக்கு எதுவுமே சிறியதாக இருந்தால் பிடிக்காது. எல்லாவற்றையும் பிரம்மாண்டமாகத்தான் யோசிப்பேன். இந்தப் படமும் பிரம்மாண்டமாகத்தான் எடுக்கப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் கால மக்கள் கலாச்சாரம், மொழி நடை, உடைகள், நாட்டு நடப்பு என பலவற்றைப் பற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொண்டுள்ளோம். இதனால் தான் படம் ஆரம்பமாகத் தாமதமானது. கிராபிக்ஸ் பணிகளுக்கென்றே ஆறு மாதங்கள் ஒதுக்கவுள்ளோம். ஆனால் கிராபிக்ஸ், இயற்கையான ஒரு தோற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான். பிரம்மாண்டத்துக்காக அல்ல.
அதே போல, இரண்டு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களாக இருக்கும்போது உறுதுணைக் கதாபாத்திரங்களிலும் பிரபல நடிகர்கள் தேவைப்பட்டார்கள். பாலிவுட் நட்சத்திரம் அஜய் தேவ்கன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அலியா பட் ராம் சரணின் ஜோடியாக நடிக்கிறார். டெய்ஸி எட்கார் ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகை ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்கு முதுகெலும்பாக இருக்கும். இப்படி மிக வலிமையான உறுதுணைக் கதாபாத்திரங்கள் உள்ளனர்" என்று ராஜமௌலி குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரை படத்தின் பட்ஜெட் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.