என் கடைசிப் படமாக மகாபாரதம் இருக்கலாம்: ராஜமௌலி

என் கடைசிப் படமாக மகாபாரதம் இருக்கலாம்: ராஜமௌலி
Updated on
1 min read

மகாபாரதத்தை தான் திரைப்படமாக எடுத்தால் அது தன் கடைசிப் படமாக இருக்கும் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார்.

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை அறிவித்தார். படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில், 'பாகுபலிக்கு'ப் பிறகு மகாபாரதம் எடுக்கப்போகிறீர்கள் என செய்திகள் வந்தன, அது உங்கள் மனதில் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.

இதற்கு இயக்குநர் ராஜமௌலி பதிலளிக்கையில், "அது எனது கனவுப் படம் என்றே சொல்லியிருக்கிறேன். நான் எவ்வளவு தெளிவுபடுத்தினாலும் எனது அடுத்த படம் அதுதான் என புரளிகள் வந்து கொண்டே இருக்கின்றன. எங்கு போனாலும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மகாபாரதம் எனது கடைசிப் படமாக, அல்லது படங்களாக இருக்கலாம். மகாபாரதம் எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். 24 மணி நேரமும் மூளையின் ஒரு பகுதியில் அது பற்றிய சிந்தனை இருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in