

'ஒரு அடார் லவ்' படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது.
ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓரு அடார் லவ்'. 'மாணிக்க மலராய பூவி' பாடல், ப்ரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் வைரல் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.
இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் காதலர் தினத்தன்று வெளியானது.
இப்படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கடுமையாக விமர்சித்தார்கள். தற்போது கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியுள்ளது படக்குழு.
இது தொடர்பாக இயக்குநர் ஓமர் லுலு “படத்தின் கிளைமாக்ஸ் பகுதியை நாங்கள் ஒரே நாளில் மீண்டும் ஷூட் செய்துள்ளோம். 10 நிமிடங்கள் கொண்ட இந்த கிளைமாக்ஸ் காட்சியை தற்போது உள்ள காட்சிக்குப் பதிலாக இணைத்திருக்கிறோம்.
இதனைத் தவிர படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய வடிவத்தில் படம் வரும் நாளை (பிப்.20) பகல் காட்சிக்கு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பலர் ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.