தமிழில் ரிலீஸாகும் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்குப் படம்

தமிழில் ரிலீஸாகும் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்குப் படம்
Updated on
1 min read

விஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்குப் படமான ‘துவாரகா’, தமிழில் ரிலீஸாகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் மூலம் மொழி கடந்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

எனவே, ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. ஆனந்த் சங்கர் இயக்கிய இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனாலும், விஜய் தேவரகொண்டாவின் க்ரேஸ் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘துவாரகா’ தெலுங்குப் படத்தை, தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். ஸ்ரீனிவாஸ் ரவிந்திரா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக பூஜா ஜவேரி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

தமிழில் இந்தப் படத்துக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ என விஜய் தேவரகொண்டாவின் புகழ்பெற்ற படத் தலைப்பை வைத்துள்ளனர். பாடல் பதிவுடன் இன்று (பிப்ரவரி 1) டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

‘அர்ஜுன் ரெட்டி’, தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்க, விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். ஹீரோயினாக மேகா நடித்துள்ளார். இந்த மாதம் (பிப்ரவரி) ‘வர்மா’ ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in