

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே என நடிகர் ராம் சரண் தேஜா கூறியுள்ளார்.
ராம் சரண் தேஜா, பிரசாந்த், சினேகா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ’வினய விதேய ராமா’ திரைப்படம், ராம் சரண் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. விமர்சன ரீதியாக கடுமையாக சாடப்பட்ட இந்தத் திரைப்படம் வசூலிலும் சோபிக்கவில்லை. படத்தின் லாஜிக் இல்லாத காட்சிகள் சமூக வலைதளங்களில் சராமாரியாக கிண்டல் செய்யப்பட்டன. படத்தின் இயக்குநர் போயபாடி சீனுவை விமர்சித்தும் பலர் பதிவிட்டனர்.
'ரங்கஸ்தலம்' போன்ற நல்ல படத்துக்குப் பிறகு ராம் சரண் தேஜா இது போன்ற படத்திலா நடிக்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கவலையுடன் பேசி வந்தனர். இந்நிலையில், 'வினய விதேய ராமா' தோல்வி குறித்து ராம் சரண் தேஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"உலகம் முழுவதும் இருக்கும் என் இனிய ரசிகர்களே, பார்வையாளர்களே,
என் மீதும், என் படங்கள் மீதும் காட்டப்பட்டும் அன்பையும், ஆதரவையும் பார்த்தால் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
'வினேய விதேய ராமா' படத்துக்காக இரவு பகலாக அயராது உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எங்கள் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா அவர்களின் ஆதரவை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எங்கள் படத்தை நம்பி, ஆதரித்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் என்றும் கடன் பட்டுள்ளேன்.
உங்கள் அனைவருக்குமான ஒரு பொழுதுபோக்கு படத்தைக் கொடுக்க நாங்கள் கடுமையாக உழைத்தோம். துரதிர்ஷ்டவசமாக, எங்கள் நோக்கம் திரையில் சரியாக பிரதிபலிக்கவில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஆனால் உங்கள் அளப்பற்ற அன்பு, ஆதரவும் என்றும் என்னை மேலும் உழைக்க உற்சாகப்படுத்தும், உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நல்ல படங்களை கொடுக்கச் செய்யும். எனக்கு எப்போதும் ஆதரவளித்த வரும் ஊடகங்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
என்று அன்புடன்..
ராம் சரண் "