

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராட்சசன்' படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.
இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இதர மொழிகளில் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இதில் இந்தி ரீமேக் உரிமையை மட்டும், பட வெளியீட்டுக்கு முன்பே விஷ்ணு விஷால் கைப்பற்றிவிட்டார்.
கடும் போட்டிக்கு இடையே ஹேவிஸ் லட்சுமண் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், அமலாபால் கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளனர். ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
தமிழில் 'ராட்சசன்' படத்தின் பின்னணி இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இங்கு இசையமைப்பாளராக பணிபுரிந்த ஜிப்ரானே, தெலுங்கிலும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.