விஜய் தேவரகொண்டா வாழ்க்கையைப் படமாக்கும் மோகன் ராஜா?

விஜய் தேவரகொண்டா வாழ்க்கையைப் படமாக்கும் மோகன் ராஜா?
Updated on
1 min read

விஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஐடியாவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் இந்தியா முழுக்கப் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ என அடுத்தடுத்து வெளியான அவருடைய படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

அதுவும், ‘டாக்ஸிவாலா’ படம், தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன்பே ஆன்லைனில் ரிலீஸாகிவிட்டது. இருந்தாலும், தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்து வெற்றிப் படமாக்கினர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள். ‘நோட்டா’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக்குள் சாதித்தவர்கள் பட்டியலில், விஜய் தேவரகொண்டா இடம்பிடித்தார். இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நபர் இவர் மட்டும்தான்.

இந்தத் தகவலை ட்விட்டரில் பகிர்ந்த விஜய் தேவரகொண்டா, ‘என்னுடைய 25-வது வயதில் வங்கியின் குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.500 கூட என்னிடம் இல்லை. அதற்காக ஆந்திர வங்கி என்னுடைய வங்கிக் கணக்கை முடக்கியது. என்னுடைய அப்பாதான் பணத்தைக் கொடுத்து செட்டில் செய்யச் சொன்னார்.

ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து இன்று, ஃபோர்ப்ஸ் நட்சத்திரப் பட்டியலில் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு, ‘இந்த ட்வீட்டில் இருந்து சுவாரசியமான திரைக்கதை கிடைத்திருக்கிறது. இதற்காகப் பின்னர் காப்பிரைட்ஸ் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்’ என்று மோகன் ராஜா தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ‘(அந்தப் படத்துக்கு) உங்கள் முதல் சாய்ஸ் நானாக இருக்கும் பட்சத்தில், காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன். மிகப்பெரிய நன்றி அண்ணா’ எனத் தெரிவித்துள்ளார்.

மோகன் ராஜா தற்போது ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in