Published : 01 Sep 2014 03:13 PM
Last Updated : 01 Sep 2014 03:13 PM

மம்முட்டியின் மை ட்ரீ சேலஞ்ச் - ஷாரூக், விஜய், சூர்யாவுக்கு முதல் சவால்

கடந்த வாரங்களில் இணையத்தில் அதிவேகமாகப் பரவிய ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவாலைப் போல, மலையாள நட்சத்திரம் மம்முட்டி, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சவாலை செய்ய, ஷாரூக் கான், விஜய், சூர்யா ஆகியோருக்கு மம்முட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மம்முட்டி கூறியதாவது:

"பசுமையான உலகத்திற்கு மரங்கள் தழைப்பது முக்கியமானதாகும். நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் கொடுத்தல், நீரை மறுசுழற்சி செய்தல் என பறவைகள் முதலான பல ஜீவராசிகளோடு ஒரு அழகான சூழலை உருவாக்க முடியும்.

ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவால் இன்று இணையத்தில் பரவி, பிரபலமடைந்துள்ளது. அதைப் போல, 'என் மரம் சவால்' ('மை ட்ரீ சேலஞ்ச்') என்ற புதிய முயற்சியை நான் துவக்குகிறேன். எனது மலையாளத் திரையுலக நண்பர்கள் மற்றும் பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் இந்த நல்ல நோக்கத்திற்காக இணைந்து, இந்த உலகை அனைவரும் வாழத் தகுதியான பசுமையான இடமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான், தமிழ் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர், மரக்கன்று நட்டு, இந்த பசுமைப் புரட்சியில் இணைய வேண்டும் என சவால் செய்கிறேன். மை ட்ரீ சேலஞ்ச் என்ற இந்த வாசகம், வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல், இயற்கையை நமக்காகவும், நமக்குப் பின் வரும் தலைமுறைக்காகவும் காப்பாற்ற, அனைவரும் பின்பற்றும் ஒரு நோக்கமாக மாறவேண்டும்.

ஒரு ஆரோக்கியமான சுற்றுசூழலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் இதில் இணையலாம். எனவே, உங்கள் தரப்பிலிருந்து சிறிய முயற்சி செய்து, மை ட்ரீ சேலஞ்சை எடுத்து, ஒரு மரக்கன்றை நடுங்கள். மரங்களை எப்போது, எப்படி முடியுமோ, காப்பாற்றுங்கள்.

இதன் மூலம் நம் இயற்கை வளங்களை காக்க, உங்களது குடும்பம், நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள் என அனைவருக்கு ஒரு தூண்டுகோலாக இருங்கள். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் மதிப்பதில் நம் குழந்தைகளுக்கு நாம் ஓர் எடுத்துக்காட்டாக இருப்போம். விலைமதிப்பற்ற நமது உலகை நாம் அவ்வாறே பார்த்துக் கொள்வது தான் முறை.

நீங்கள் மரக்கன்று நட்ட புகைப்படத்தை பதிவேற்றும் போது, இந்த ஃபேஸ்புக் பக்கத்தையும் (www.facebook.com/MyTreeChallenge, ட்விட்டர் இணைச் சொல்லையும் (#MyTreeChallenge) மறக்காதீர்கள்"

இவ்வாறு மம்முட்டி கூறியுள்ளார். ஏற்கனவே, ஐஸ் பக்கெட் சவாலைப் போலவே, ரைஸ் பக்கெட் சவால் - ஏழைகளுக்கு அரிசி தானமாக அளிக்கவேண்டும் - என புதிய சவால் ஒன்று சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, மம்முட்டி வேறொரு நல்ல காரியத்தை செய்ய இப்படியான சவாலை கையிலெடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x